இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம் பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்திய அரசியலிலும் அதானி புயல் வீசத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ”டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டுகள் கைவிடப்படலாம்” என இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ஒவ்வொரு புதிய அதிபர் பதவியேற்கும்போதும் தங்கள் புதிய டீமை எடுத்துவருவார்கள். அதேபோலத்தான் ட்ரம்பும் தனது புதிய டீம் உடன் வருவார். அவர் ஏற்கெனவே இப்போதுள்ள எஃப்.பி.ஐ செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருக்கிறார். பொதுவாக அமைச்சரவையில் ஒருவரைச் சேர்க்கும் முன்பு எஃப்.பி.ஐ அவர்களின் பின்னணியைச் சோதிக்கும்.
ஆனால், ட்ரம்ப் அதெல்லாம் வேண்டாம் எனக் கூறிவிட்டார். அதாவது யார்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். யார் மீது தேவையில்லை என்பதை ட்ரம்ப் முடிவு செய்கிறார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்கும் நிலையில், அப்போது அதானி தரப்பு இந்த விவகாரத்தை எழுப்பலாம். அதானி மீதான கிரிமினல் அல்லது சிவில் குற்றச்சாட்டுகள் தகுதியற்றதாக அல்லது குறைபாடு கொண்டதாக ட்ரம்ப் அரசு கருதினால் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.