உலகம்

வன்முறை நிகழ்த்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டம்: அமெரிக்காவில் உஷார் நிலை!

JustinDurai

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் வரும் 20 ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் வன்முறை நிகழலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் கடந்த 6 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதே போன்ற வன்முறை சம்பவங்களை 50 மாநிலங்களிலும் நிகழ்த்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் தலைநகர் வாஷிங்டன் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாஷிங்டன் டிசியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் மூடப்பட்டுள்ளன. முக்கிய தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விர்ஜினியாவில் இரு கைத்துப்பாக்கிள், மற்றும் வெடிப்பொருட்களுடன் அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில், இன்று நாடு தழுவிய அளவில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.