ட்ரூடோ, ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

”கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றலாம்” - ட்ரம்பின் பதிலால் சிரித்த ட்ரூடோ!

அதிக கட்டணங்களை தவிர்ப்பதற்காக கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

Prakash J

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தற்போதே அதைப் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, பல அதிரடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். குடியேற்றக் கொள்கை, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு, டாலருக்கு எதிரான எச்சரிக்கை என அதில் அடக்கம்.

டொனால்டு ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப், கடந்த வாரம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, ​​அதிக கட்டணங்களை தவிர்ப்பதற்காக கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ”கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும்” என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க இருக்கும் ட்ரம்ப், முக்கியமான சில கோப்புகளில் கையெழுத்திட இருக்கிறார். அதில் ஒன்றாக, ‘கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும்’ என அவர் தெரிவித்திருந்தார். ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களால் போதை மருந்து கடத்தல்கள் மற்றும் குற்றங்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்கும் வகையிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவுக்குப் பறந்து ட்ரம்பைச் சந்தித்தார். பின்னர், இருவரும் இரவு உணவை உட்கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அப்போது கனடா பிரதமர், “கனடா மீதான வரி நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாகக் கொன்றுவிடும் என்பதால், 25 சதவீத வரியை ஏற்க முடியாது” எனக் கோரிக்கை வைத்தார். அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், ”உங்கள் நாடு 100 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவைப் பிடுங்கினால் ஒழிய, உங்களால் பிழைக்க முடியாதா” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், ”கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாகப் பிரிக்கலாம். அதற்கு ஆளுநராக உங்களை நியமிக்கலாம்” என்றார். இதைக்கேட்டு இருவருமே சிரித்தனர். அப்போது அமர்வில் இருந்த ஒருவர், ”கனடா உண்மையிலேயே தாராளவாத நாடாக இருக்கும்” என்று பரிந்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில், குடியேற்ற அமலாக்கம் குறித்து ட்ரூடோவுக்கு ஒரு தீவிரமான செய்தியை ட்ரம்ப் கொடுத்ததாகவும் தெரிகிறது.