donald trump ராய்ட்டர்ஸ்
உலகம்

மெக்சிகோ வளைகுடா | சொன்னபடி பெயரை மாற்றும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து!

மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்யும் உத்தரவில் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

Prakash J

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். இவர், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். பதவியேற்பதற்கு முன்னதாக, ”மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றப் போகிறேன். இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்க வளைகுடா என்பது எவ்வளவு அழகான பெயர்? அது மிகவும் பொருத்தமானது” என்று கூறியிருந்தார்.

இது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், ”மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளை, ’மெக்சிகன் அமெரிக்கா’ என்று பெயர் மாற்றலாம். அந்தப் பெயரும் நன்றாக இருக்கிறது.

உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர், 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, ட்ரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” என தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்யப்படுமென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கூகுள் மேப்பில், அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் செய்யப்படுமென கூகுள் நிறுவனமும் தெரிவித்திருந்தது.

அதாவது மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என்று தெரியும் என அது அறிவுறுத்தியுருந்தது. இந்த நிலையில், மெக்சிகோ பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஒன் விமானத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகருக்குப் பயணித்தபோது, இதற்கான ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்ட வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.