அமெரிக்காவின் பதில் வரி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரிவிகிதம் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை இருக்கும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக 12 நாடுகளுக்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அந்த நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்ப தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், எந்தெந்த நாடுகள் என்ற விவரங்கள் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் பதில் வரி விகிதங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்சமாக 10 முதல் 20 சதவீதம் என்றும் அதிகபட்சமாக 60 முதல் 70 சதவீதம் வரை இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பதில் வரி அமலுக்கு வரும் நிலையில், தங்கள் நாட்டுக்கு அன்று முதல் வருமானம் அதிகரிக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அமெரிக்க பொருட்களுக்கு அதே அளவிற்கு பதில்வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.