ட்ரம்ப், மோடி எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்ப் அடுத்த அதிரடி | மருந்துகளுக்கு வரிவிதிப்பு? இந்தியாவுக்குப் பாதிப்பு!

விரைவில் மருந்து இறக்குமதிகளுக்கு பெரிய வரியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அடுத்த அணுகுண்டை வீசியிருக்கிறார்.

Prakash J

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விரைவில் மருந்து இறக்குமதிகளுக்கு பெரிய வரியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அடுத்த அணுகுண்டை வீசியிருக்கிறார். இது, இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகம் மருந்து இறக்குமதிகளுக்கு அதன் பரஸ்பர கட்டணக் கொள்கையின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இத்தகைய முடிவை எடுக்கப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப்

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் சொந்தமாக மருந்துகளைத் தயாரிப்பதில்லை என்பதால் மருந்து நிறுவனங்கள் மீதும் வரிகள் விதிக்கப்படும்; அவை வேறொரு நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் அதே பாக்கெட்டின் விலை 10 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேலாக இருக்கிறது. நாங்கள் மிகப் பெரிய சந்தையாக இருக்கிறோம். ஆகையால், மிக விரைவில், மருந்து நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய வரியை விதிக்க இருக்கிறோம். இந்த நிறுவனங்கள் அதைக் கேள்விப்படும்போது, ​​அவர்கள் சீனாவையும் பிற நாடுகளையும் விட்டு வெளியேறுவார்கள். ஏனெனில் அவர்களின் பெரும்பாலான தயாரிப்புகள் இங்கே விற்கப்படுகின்றன. மேலும், அவர்கள் இங்கே தங்கள் ஆலைகளைத் திறப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. காரணம், அமெரிக்காவில் இந்திய மருந்துகளின் ஏற்றுமதி சந்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவின் 27.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து ஏற்றுமதியில், 31 சதவீதம் அல்லது 8.7 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிற்கு சென்றதாக இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஜெனரிக் மருந்துகளில் 45 சதவீதத்திற்கும் அதிகமானவற்றையும், பயோசிமிலர் மருந்துகளில் 15 சதவீதத்தையும் இந்தியா வழங்குகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் ரெட்டீஸ், அரவிந்தோ பார்மா, சைடஸ் லைஃப் சயின்சஸ், சன் பார்மா மற்றும் க்ளாண்ட் பார்மா போன்ற நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் 30-50 சதவீதம் வரை அமெரிக்க சந்தையிலிருந்து ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.

model image

இந்த நிலையில், இந்திய மருந்து இறக்குமதிகள் மீதான அமெரிக்கா வரி விதித்தால் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என HDFC செக்யூரிட்டீஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள், ”இந்த வரிவிதிப்பு அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டையும் கடுமையாகப் பாதிக்கும். ஏனெனில், அவை உற்பத்திச் செலவுகளை அதிகரிக்கும். உற்பத்தியாளர்களின் விலை போட்டித்தன்மையைக் குறைக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிக விலையைக் கொடுக்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் குறைந்த விலை ஜெனரிக் மருந்துகளை அமெரிக்கா சார்ந்துள்ளது. இதற்கு அதிக வரிகள விதிக்கப்பட்டால், அது நாட்டில் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இதற்கிடையே, அமெரிக்க ஜெனரிக் துறையில் மிகக் குறைந்த லாபத்தில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், செலவுகளை உள்வாங்க போராடி, இறுதியில் அவற்றை அமெரிக்க நுகர்வோர் அல்லது காப்பீட்டாளர்களுக்கு வழங்கக்கூடும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.