donald trump x page
உலகம்

”அடுத்து பாகி. - ஆப்கான் போர்தான்..” - அதிபர் டொனால்டு ட்ரம்ப்!

அடுத்து, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

அடுத்து, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அவர், இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், கொசோவோ-சொ்பியா, காங்கோ-ருவாண்டா, எகிப்து-எத்தியோப்பியா, ஆா்மீனியா-அஜா்பைஜான் நாடுகளுக்கு இடையிலான போா்களை நிறுத்தியதாகத் தொடர்ந்து கூறிவருகிறார். அதிலும் இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தியதாக, இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை கூறியுள்ளார். தற்போது இஸ்ரேல் - காஸா போரையும் நிறுத்தியுள்ளார். இதன்மூலம் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து, தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனாலும் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதையும் தடுத்து நிறுத்த இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இதுகுறித்து அவர், “பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இப்போது ஒரு போர் நடந்து கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். மத்திய கிழக்குப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். நான் போர்களைத் தீர்ப்பதில் வல்லவன் என்பதால் இதையும் செய்யவிருக்கிறேன். தனது அமைதி முயற்சிகள் மூலம் போர்களைத் தீர்க்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் உதவியிருப்பது எனக்குப் பெரிய கௌரவம். இந்தியா, பாகிஸ்தான் பற்றி யோசித்துப் பாருங்கள். பல வருடங்களாக நடைபெற்றுவந்த சில போர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒன்று 31 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இன்னொன்று 32 ஆண்டுகளாகவும், மற்றொன்று 37 ஆண்டுகளாகவும் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாட்டிலும் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், அவற்றில் ஒவ்வொன்றையும் நான் பெரும்பாலும் ஒருநாளுக்குள் முடித்துவிட்டேன். இது மிகவும் நல்லது. இதைச் செய்வது ஒரு கடமை. இதன்மூலம் நான் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன். அமைதிக்கான நோபல் பரிசு 2024ஆம் ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் 2025ஆம் ஆண்டில் நடந்த பல விஷயங்கள் முழுமையானவை மற்றும் சிறப்பானவை என்பதால் அதற்கு விதிவிலக்கு அளிக்கலாம் என்று கூறியவர்களும் உண்டு. ஆனால், நான் இதை நோபலுக்காகச் செய்யவில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் நான் இதைச் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தலிபான்கள், தங்கள் மண்ணில் பாகிஸ்தான் போராளிகள் இருப்பதை மறுக்கின்றனர். இதற்கிடையே எல்லையில் தெக்ரிக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு, அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்துகிறது. இவ்விரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற சமீபத்திய தாக்குதல், அண்டை நாடுகளுக்கு இடையேயான மிகக் கடுமையான சண்டையாகப் பார்க்கப்பட்டது.

இந்த மோதல்களில் பாகிஸ்தான் ராணுவம் 23 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், தலிபான் தரப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. பாகிஸ்தானில் தாக்குதல்களை அதிகரித்த தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுவதாகக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் கோரியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில் தற்போது அங்கு தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையேதான் இந்தப் போரையும் தாம் நிறுத்தவிருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.