அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப், மீண்டும் பதவியேற்ற நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்கும் திட்டம் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டியில், “கிம் ஒரு புத்திசாலி. அவர் மதவெறியர் அல்ல. கிம் ஜாங் உன் சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, கிம்மின் சகோதரி அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டியிருந்தார். அவர், “அமெரிக்காவின் புதிய அரசாங்கம் வடகொரியாவிற்கு எதிரான அரசியல், ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இது முந்தைய அரசின் விரோத கொள்கையை முன்னெடுத்து செல்லும் செயல்” என அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில்கூட அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை வடகொரியா அறிமுகம் செய்துள்ளது. இது 6,000 டன் முதல் 7,000 டன் வரை எடை கொண்டதாக உள்ளது.
இந்த நிலையில், ”வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் இன்னும் நல்ல உறவு இருக்கிறது” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கிம் ஜாங் உன்னிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளன. அதேபோன்ற பிற நாடுகளிடமும் உள்ளது. என்றாலும், அந்த நாட்டு அணு ஆயுத எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். அவர்களுடைய சக்தி மிகவும் பெரியது” எனத் தெரிவித்துள்ளார்.