donald trump x page
உலகம்

”கொஞ்சம் யோசித்துப் பாருங்க..” இஸ்ரேலிடம் பேசிய ட்ரம்ப்.. முடிவுக்கு வந்த லெபனானின் போர் நிறுத்தம்!

இஸ்ரேலும் லெபனானின் ஹிஸ்புல்லாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, அது அமலில் வந்துள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Prakash J

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகமும், சர்வதேச வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக, மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன. இதையடுத்து, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்ததால் ஈரான் மீதான கடல்வழித் தடையை அமெரிக்கா நீக்கியது. இதனால் முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடையின்றித் தொடங்கியது. மேலும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளுக்கும் 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதேநேரத்தில், இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிக்காட்டியதுடன், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால், சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளும் தாமதமாகியுள்ளன. மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தக் கையெழுத்து விழாவிற்காக, சுவிட்சர்லாந்து செல்லவிருந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் பயணம் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலின் இந்தச் செயல், அமெரிக்காவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், இஸ்ரேலும் லெபனானின் ஹிஸ்புல்லாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, அது அமலில் வந்துள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருப்பதாகக் கூறப்படுகிறது. சண்டையானது ஒரு பரந்த பிராந்திய ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் அபாயம் உள்ளதால், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேசியதாகவும், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியதாகவும் ட்ரம்ப் கூறியதாக ஊடகச் செய்தியாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Netanyahu & Trump

ஆனால், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நேரடியாகப் பேசினாரா என்பதைத் தெரிவிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்தே, இருதரப்பிலும் போர் நிறுத்தம் அமலானதாகக் கூறப்படுகிறது. ஈரானின் உதவியுடன் அமெரிக்க மற்றும் கத்தார் நாட்டுப் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த உதவியுள்ளனர். மேலும், லெபனானில் ஒரு முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே மேலதிக பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகும் என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஃபத்லல்லா தெரிவித்தார். ஒப்பந்தத்தின் கீழ் உள்ள உறுதிமொழிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு வாஷிங்டனுக்கு உண்டு என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்தார்.