அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 2005-ஆம் ஆண்டுக்கான வருமான வரி ஆவணங்கள் ஊடகங்களுக்குக் கிடைத்திருக்கின்றன.
அந்த ஆண்டில் சுமார் ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டியதாகவும், சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு அவர் வருமான வரி கட்டியதாகவும் ஆவணங்களின் மூலம் தெரியவந்திருக்கிறது. இது சராசரியாக ஒரு அமெரிக்கர் செலுத்தும் வருமான வரி விகிதத்தை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தை அமெரிக்காவின் எம்எஸ்என்பிசி (MSNBC) தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. வருமானத்துக்கான ஆதாரங்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. வருமான வரி தொடர்பான ஆவணத்தை வெளியிட்டிருப்பது சட்ட விரோதமானது என வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வருமான வரிக் கணக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால், கடந்த தேர்தல் பரப்புரையின்போது, வருமான வரி தொடர்பான ஆவணங்களை வெளியிடப் போவதில்லை என்று ட்ரம்ப் பிடிவாதமாக இருந்தார். இதுகுறித்து அவர் மீது விமர்சனம் எழுந்தது.