சீனாவுக்கு விதிக்கப்படும் இறக்குமதிகள் மீதான வரியை 125 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இந்தியா, சீனா, உள்பட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பை ட்ரம்ப் அதிரடியாக உயர்த்தினார். குறிப்பாக சீனாவுக்கு கடந்த 2 மாதங்களில் 54 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், சீனாவும் அமெரிக்காவுக்கு 34 சதவீதம் பதில் வரி விதித்தது.
இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப் சீனாவுக்கு கூடுதலாக 50 சதவீத வரியை விதிப்பதாக அறிவித்தார். இதையடுத்து சீன பொருட்களுக்கான வரி 104 சதவீதமாக அதிகரித்தது.
எனினும் சளைக்காத சீனா, அமெரிக்காவுக்கான கூடுதல் வரியை 84 சதவீதமாக உயர்த்துவதாக தெரிவித்தது. இந்தநிலையில் சீன இறக்குமதி மீதான வரி, 125 சதவீதம் உயர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் தங்களது வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்காத நாடுகளுக்கு, 90 நாட்கள் வரை வரி விதிப்பு நடவடிக்கை இடைக்காலமாக நிறுத்தப்படுவதாகவும், அதுவரை அந்நாடுகளுக்கு 10 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீனா தங்களுக்கு பதிலடி கொடுத்ததால்தான் அவர்களுக்கு மேலும் வரிகள் விதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். வரி விதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 75க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.