அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரான் ஒரு சமாதான ஒப்பந்தத்தை நோக்கி விரைவாக நகர வேண்டும். இல்லையெனில், அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது என்று ட்ரம்ப் புதிய எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஈரானியப் படகுகள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள், விண்வெளிப் போர் மற்றும் ஈரானின் மீது பறக்கும் அமெரிக்கக் கொடி ஆகியவற்றை தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சில மணி நேர இடைவெளியில், ட்ரம்ப் 20-க்கும் மேற்பட்ட படங்களை தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அவர் பதிவிட்ட ஒரு படத்தில், ஈரானின் வரைபடத்தின் மீது அமெரிக்கக் கொடி பதிக்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு படத்தில், "பை பை, வேகப் படகுகளே" என்ற தலைப்புடன், ஒரு அமெரிக்க ஆளில்லா விமானம் ஈரானிய வேகப் படகுகளைத் தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. மேலும், ஒரு அமெரிக்கப் போர்க்கப்பல் ஈரானிய விமானத்தைக் குறிவைப்பதைக் காட்டும் வீடியோவையும் அவர் பதிவிட்டிருந்தார். 5 வினாடி இருக்கும் அந்த வீடியோவில், ட்ரம்ப் ஒரு மேசையைத் தட்டி, கணினியில் டைப் செய்வதுபோல நடித்து, "பா பா பா பா... ஃபயர், பூம்" என்று கூறுவதைக் காணலாம். ’விண்வெளிப் படை’ என்ற தலைப்பிட்டு விண்வெளியில் செயற்கைக்கோள்களால் சூழப்பட்டு, சுற்றுப்பாதையிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களை, தான் மேற்பார்வையிடுவது போன்ற படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். மற்றொரு படத்தில், அவர் ஒரு விண்கலத்தின் 'kill' பொத்தானை அழுத்துவதைக் காணலாம்; அதன் பின்னணியில் உள்ள பல திரைகளில் ஏவுகணைத் தாக்குதல்களும், அணுகுண்டு வெடிப்பு போன்ற காட்சி இருக்கிறது.