நியூயார்க் மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தானி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் சந்தித்திருப்பது உலக அளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். இதில் வெற்றிபெற்றதன் மூலம், 34 வயதான அவர், முதல் இஸ்லாமிய மேயர், முதல் ஆசியர், முதல் இந்திய வம்சாவளி மேயர் உள்ளிட்ட பெருமைகளைப் பெற்றார். இத்தேர்தலில், ட்ரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். இந்த தேர்தலுக்கு முன்பாக ஜோஹ்ரான் மம்தானிக்கும், ட்ரம்ப்க்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் வெடித்து வந்தது. குறிப்பாக, நியூயார்க் மேயர் தேர்தலில் இடதுசாரி கொள்கைகளை கொண்ட மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க்கிற்கு அரசு நிதி வழங்காது என அதிபர் ட்ரம்ப் என மிரட்டியிருந்தார். ஆனால், அந்த மிரட்டலையும் தாண்டி மம்தானியை நியூயார்க் நகர மேயராகத் தேர்வு செய்தனர். இதையடுத்து தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய மம்தானி, அதிபர் ட்ரம்பைக் கடுமையாக விமர்சித்தார்.
பதிலுக்கு ட்ரம்பும், ”தாம் நியூயார்க்கை மிகவும் நேசிப்பதால், மம்தானி தன்னிடம் மிகவும் நன்றாக நடந்துகொள்ள வேண்டும். அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால், அவர் நிறைய இழக்க நேரிடும்” என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் மம்தானி, அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், ”மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்தது. அவர் மிகச் சிறந்த வேலையைச் செய்ய முடியும். எங்களுக்கு ஒரு பொதுவான விஷயம் உள்ளது. இந்த நகரத்திற்காக மிகவும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறோம். மேயரை வாழ்த்த விரும்பினேன். ஆரம்பகால முதன்மைத் தேர்வுகளில் தொடங்கி, பல புத்திசாலி மக்களுக்கு எதிராக அவர் உண்மையிலேயே நம்பமுடியாத பந்தயத்தை நடத்தினார். மேலும் அவர் அவர்களை எளிதாக வென்றார், நான் நினைத்ததைவிட நிறைய விஷயங்களில் அவர்கள் உடன்பட்டனர்” எனத் தெரிவித்த அவர், தேர்தலில் வெற்றிபெற்றமைக்காக மம்தானியை வாழ்த்தினார். அதேபோல் ட்ரம்பை கடந்த காலங்களில் ‘பாசிஸ்ட்’ என்றும் ’சர்வாதிகாரி’ என்றும் மம்தானி முத்திரை குத்தினார். இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியை ட்ரம்ப் மறுத்தார்.
அதன்பிறகு பேசிய மம்தானி, “இன்று எங்களுக்குள் ஒரு சந்திப்பு நடந்தது, அதிபர் ட்ரம்ப் உடனான உரையாடலை நான் பாராட்டுகிறேன். அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எனக்கு நியூயார்க் நகரம் மிகவும் பிடிக்கும். இந்த மேயர் பதவியில் உண்மையிலேயே சிறப்பாக இருக்கக்கூடிய சில விஷயங்களைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். வாடகை, மளிகைப் பொருட்கள், பயன்பாடுகள், மலிவு விலை, வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் வீட்டுவசதி போன்ற பிரச்னைகள் குறித்து இருவரும் பேசினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இருவரும் பல மாதங்களாக ஒருவருக்கொருவர் எதிராக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்ததாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.