உலகம்

குடியரசு கட்சியிலிருந்து விலகும் அதிபர் ட்ரம்ப்? புதுக்கட்சியை தொடங்குவதாக தகவல்?!

webteam

அதிபர் பதவியிலிருந்து விலகும் ட்ரம்ப் குடியரசு கட்சியிலிருந்தும் விலகவுள்ளதாகவும், புதுக்கட்சி ஒன்றை தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் இன்னும் சில நேரங்களில் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் வயதான நபரான ஜோ பைடன் நவம்பரில் 78 வயதை எட்டினார். இதன்மூலம் பதவியேற்கும்போது, அவர் அதிபராக பதவியேற்ற மிக வயதான நபராக இருப்பார்.

இந்நிலையில், அதிபர் பதவியிலிருந்து விலகும் ட்ரம்ப் குடியரசு கட்சியிலிருந்தும் விலகவுள்ளதாகவும், புதுக்கட்சி ஒன்றை தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டிவந்த ட்ரம்புக்கு ஆதரவாக கடந்த மாதம் 6 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்களால் கலவரம் மூண்டது. இதற்கு ட்ரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது செயல்பாடுகளுக்கு குடியரசுக் கட்சியினரே ஆதரவு தெரிவிக்காததால் அக்கட்சியிலிருந்து ட்ரம்ப் விலகவுள்ளதாகவும், தேச பக்தி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் குடியரசுக்கட்சியும் ஜனநாயக கட்சியும் மாறி மாறி கோலோச்சி வரும் சூழலில் புதிதாக ஒரு கட்சி தொடங்குவதும் அதனை முன்னிலைப்படுத்துவதும் சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது.