ட்ரம்ப், நெதன்யாகு pt web
உலகம்

99 சதவிகித மக்கள் ஆதரவு.. இஸ்ரேலில் பிரதமர் பதவிக்குப் போட்டி.. ட்ரம்ப் சொல்வது என்ன?

போதைப் பொருள் விவகாரத்தில் வெனிசுலா அதிபரைச் சிறைபிடித்த நிலையில், தற்போது அவரது பார்வை அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் பக்கம் திரும்பியுள்ளது.

Prakash J

தாம் நினைத்தால் இஸ்ரேல் பிரதமர் பதவிக்குக்கூட போட்டியிடலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருப்பது அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள், உள்ளூர் மக்கள் என யாரையும் விட்டுவைக்காது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், மீண்டும் அரியணை ஏறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வரி, விசா, குடியுரிமை எனக் கடந்து தற்போது இதர நாடுகளின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார். முன்னதாக போதைப் பொருள் விவகாரத்தில் வெனிசுலா அதிபரைச் சிறைபிடித்த நிலையில், தற்போது அவரது பார்வை அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் பக்கம் திரும்பியுள்ளது.

ட்ரம்ப்

இதுதவிர, அவரது சர்ச்சைப் பேச்சுகளும் அப்போது கவனத்தைப் பெறும். கனடா, கியூபா, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளை தங்களுடன் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் அவ்வப்போது பேசி வருகிறார். மேலும், கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு, போப் ஆண்டவர் உடையில் இருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு புகைப்படத்தை ட்ரம்ப் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இது, தற்போது வரை எதிரொலித்து வருகிறது.

போப் லியோ 14 என்ற பெயரில் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபை தலைவருக்கும், அதிபர் ட்ரம்ப்க்கும் போர் தொடர்பாக முட்டல் மோதல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், “நான் நினைத்தால் இஸ்ரேல் பிரதமர் பதவிக்குக்கூட போட்டியிடலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Donald trump

இதுதொடர்பாக அவர், ”இஸ்ரேலில் தமக்கு 99 சதவீத மக்கள் ஆதரவு இருக்கிறது. ஆகையால் ஒருநாள், இஸ்ரேல் பிரதமர் பதவிக்குக்கூட தாம் போட்டியிடலாம்” எனக் கிண்டலாகத் தெரிவித்தார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தனது உறவு குறித்தும், ஈரான் மற்றும் மேற்கு ஆசியா சம்பந்தப்பட்ட தற்போதைய பதற்றங்கள் குறித்தும் விவாதித்தபோது ட்ரம்ப் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். ட்ரம்ப், இக்கருத்தை நகைச்சுவையாகக் கூறியிருந்தாலும், இஸ்ரேலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் தனக்குள்ள செல்வாக்கு குறித்து ட்ரம்ப் கடந்த காலத்திலும் இதபோன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலில் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில் ட்ரம்ப் தற்போது கருத்து தெரிவித்திருப்பது நெதன்யாகுவுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.