அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை இனவாதத்திற்கு ஆதரவாக ட்வீட் போட்டதால் மறுபடியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவில் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளை இனவாதத் தலைவர்களின் சிலையை அகற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்தச் சிலைகள் அனைத்தும் அழகானவை என்று அவர் கூறியிருக்கிறார். நாடு முழுவதும் வெள்ளை இனவாதத்துக்கு எதிரான மனநிலை உருவாகி இருக்கும் நிலையில், ட்ரம்பின் கருத்து சர்ச்சையை வலுவாக்கி இருக்கிறது.
ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது. அதிலிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டிருக்கிறார். வர்ஜீனியாவில் வெள்ளை இனவாதக் குழுவினர் நடத்திய பேரணியை ஆதரிக்கும் வகையில் பேசி, ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ட்ரம்ப்.
19-ஆம் நூற்றாண்டில் வெள்ளை இனவாதத்தை ஆதரித்தவர்களாகக் கருதப்படும் பலரது சிலையை இனவாத எதிர்ப்புக் குழுவினர் அகற்றி வருகின்றனர். அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சனின் சிலையை அகற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ், தனது லத்தீன் அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருக்கிறார். கொலம்பியா, சிலி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற பென்ஸ், பனாமா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குத் திரும்பியிருக்கிறார். ஆசிய நாடுகள் குறித்து ட்ரம்புடன் ஆலோசனை நடத்துவதற்கு வசதியாக ஒரு நாள் முன்னதாக பயணத்தை முடித்துக் கொண்டதாக அவர் கூறியிருக்கிறார்.