ஹார்வர்டு ராய்ட்டர்ஸ்
உலகம்

அமெரிக்கா | கோரிக்கையை நிராகரித்த ஹார்வர்டு.. நிதியை நிறுத்திய ட்ரம்ப் நிர்வாகம்! நடந்தது என்ன?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Prakash J

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, விசா கட்டுப்பாடுகள், ஆட்குறைப்பு உள்ளிட்டவையும் அடக்கம். இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து காஸா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் சிலர் நாடு கடத்தப்பட்டனர். மேலும், இதைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவித்தது. தொடர்ந்து, பல மாற்றங்களைச் செய்ய வலியறுத்தியதையும் நிராகரித்தது.

bernie

ட்ரம்பின் கோரிக்கைகளை நிராகரித்த ஹார்வர்டு தலைவர் ஆலன் கார்பர், "பல்கலைக்கழகம் அதன் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது அல்லது அதன் அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்காது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எந்த அரசாங்கமும் தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்கலாம், யாரைச் சேர்க்கலாம் மற்றும் பணியமர்த்தலாம், எந்தெந்த படிப்பு மற்றும் விசாரணைப் பகுதிகளைத் தொடரலாம் என்பதை ஆணையிடக்கூடாது.

ட்ரம்ப் நிர்வாகம் சட்டத் திருத்தங்கள மீறுகிறது. ஹார்வர்டில் கற்பித்தல் மற்றும் கற்றலைக் கட்டுப்படுத்த, சட்டத்திலிருந்து விலக்கப்பட்ட அதிகாரத்தை வலியுறுத்துவதன் மூலம் இந்த இலக்குகளை அடைய முடியாது. நமது குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணி... ஒரு சமூகமாக வரையறுத்து மேற்கொள்வது நமது கடமை” என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அப்பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ”சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மக்களின் வரிப் பணத்தை விரும்பினால், பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது” என அதில் தெரிவித்துள்ளது.

obama

”ட்ரம்பின் இந்தச் செயல்பாடு, கல்விச் சுதந்திரத்தை நசுக்கும்” என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அவர், ”ஹார்வர்டில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிவுசார் விசாரணை, கடுமையான விவாதம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் சூழலிலிருந்து பயனடைய முடியும் என்பதை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், ஹார்வர்டு மற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று நம்புவோம்" என்று ஒபாமா ட்வீட் செய்துள்ளார்.

கூட்டாட்சி அழுத்தத்தை எதிர்கொள்ளும் பல உயரடுக்கு நிறுவனங்களில் ஹார்வர்டும் ஒன்றாகும். இதேபோன்ற கருத்து வேறுபாடுகள் காரணமாக பென்சில்வேனியா, பிரவுன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி செய்வதை கல்வித் துறையும் இடைநிறுத்தியுள்ளது. பல பில்லியன் டாலர் நிதி வெட்டு அச்சுறுத்தலுக்குப் பிறகு கொலம்பியா பல்கலைக்கழகம் அதன் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வழிவகுத்ததைத் தொடர்ந்து, இப்பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.