அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில், முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கிவைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்திக்கு உரிமை கொண்டாடும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதற்குப் பெயர் சூட்டியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது.. வாருங்கள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில், முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கிவைத்துள்ளது. ”வாக்குறுதிகளை நிறைவேற்றாதவரை ஹார்முஸ் நீரிணையைத் திறக்கமாட்டோம்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரானும் அமெரிக்காவுடன் மல்லுக்கட்டி நிற்கிறது.
இந்த நிலையில்தான் ஹார்முஸ் நீரிணைப் பாதை தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதற்கு ‘புதிய அமெரிக்கப் பிரதேசம்’ எனப் பெயர் சூட்டி தனது ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், ஈரான் மற்றும் ஓமனுக்கு இடைப்பட்ட ஹார்முஸ் கடல் வழியை வட்டத்தில் சுட்டிக்காட்டி ’NEW U.S. Territory’ என எழுதப்பட்ட வரைபடப் படத்தை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், "ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விரைவில், இதை அமெரிக்கப் பிரதேசமாக அறிவிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% கடந்து செல்லும் இந்த முக்கியமான கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம், சர்வதேச ஆற்றல் சந்தையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வலுப்படுத்த அவர் திட்டமிடுகிறார் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், ட்ரம்ப் வெளியிட்ட இந்தப் பதிவும், அவரது கருத்தும் ஈரானை மேலும் வெறுப்படையச் செய்துள்ளது.
ஏற்கெனவே இறையாண்மை, கப்பல் போக்குவரத்து மற்றும் இராணுவக் கட்டுப்பாடு தொடர்பான விரிவடைந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில் இந்தப் பதிவு, ஈரானை மேலும் எரிச்சலூட்டி உள்ளது. ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் அரசு, ”வெறும் சமூக வலைதளப் பதிவுகள் அல்லது ட்வீட்கள் மூலம் ஒரு சர்வதேச கடல் பாதையைக் கைப்பற்ற முடியாது என்றும், அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்காதவரை அப்பாதையில் இயல்பு நிலை திரும்பாது என்றும் பதிலடி கொடுத்துள்ளது.