அமெரிக்கா - சீனா  முகநூல்
உலகம்

வரிவிதிப்பு விவகாரம் | ”ஜின்பிங்கிடம் போனில் பேசினேன்”.. ட்ரம்ப் கருத்தை மறுக்கும் சீனா!

அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீனா மறுத்துள்ளது.

Prakash J

அதிபராகப் பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்த அவர், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பை உயர்த்தினார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தியது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதை 245 சதவீதமாக்கவும் அமெரிக்கா முயற்சித்தது.

இதனிடையே, ”வரும் காலத்தில் சீனாவின் வரிவிதிப்பு விகிதம் குறைக்கப்படும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். முன்னதாக, ”சீனா பேச்சுவார்த்தை நடத்தினால் வரிவிதிப்பு நடவடிக்கை மெல்லக் குறைக்கப்படும்” எனவும்தெரிவித்திருந்தார். என்றாலும், சீனா அதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

ட்ரம்ப், ஜின்பிங்

இதற்கிடையே, கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேரடியாக தொலைபேசியில் பேசியதாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், அந்த அழைப்பு எப்போது நடந்தது, என்ன பேசினோம் உள்ளிட்ட விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. பின்னர் இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்புவிடம் செய்தியாளர்கள் கேட்டபோதும், “நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் நான் அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன்” எனத் தெரிவித்தார். ஆனால், ட்ரம்பின் இந்தக் கருத்தை சீனா மறுத்துள்ளது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், “அந்த அழைப்பு ஒருபோதும் நடக்கவில்லை. சீனாவும் அமெரிக்காவும் வரிகள் குறித்து ஆலோசனைகளையோ அல்லது பேச்சுவார்த்தைகளையோ நடத்தவில்லை. அமெரிக்கா பொதுமக்களை குழப்பக்கூடாது. வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஜின்பிங் தனது சொந்த நடவடிக்கைகளைத் தயாரித்து வருகிறார்” என அவர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சீன தூதரகம், ”பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது தவறாக வழிநடத்தும் செயல். வரிப் போரை தொடங்கியது அமெரிக்கா தான், அதை உண்மையிலேயே சரி செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும். அடுத்தவர்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, சீனாவிற்கு விதித்த வரிகள் அனைத்தையும் முழுமையாக நீக்க வேண்டும்” என்றும் அது வலியுறுத்தியுள்ளது.