ட்ரம்ப், மச்சாடோ எக்ஸ் தளம்
உலகம்

நிறைவேறிய ட்ரம்பின் ஆசை.. நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ.. பின்னணியில் இருக்கும் அரசியல்!

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார்.

Prakash J

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார்.

உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இதைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மச்சாடோ, தொலைபேசி மூலம் ட்ரம்பிடம் பேசியதாகத் தகவல் வெளியானது. அப்போது இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், ”உண்மையில் நோபல் பரிசைப் பெற்றவர் இன்று எனக்குத் தொலைபேசியில் அழைத்தார். அவர் என்னிடம், 'நான் இந்தப் பரிசை உங்கள் கௌரவத்திற்காகப் பெற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், இது உண்மையில் உங்களுக்குத்தான் உரியது' என்று கூறினார். நான் அவரிடம், 'அப்படியானால் அதைக் கொண்டு வந்து என்னிடமே கொடுத்து விடுங்கள்' என்று சொல்லவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப், மச்சாடோ

இதற்கிடையே, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் விவகாரத்தில் அமெரிக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மச்சாடோ, ”இது, வரலாற்றில் இடம்பெறும். இது மைல்கல் சாதனை. இது வெனிசுலா மக்களுக்கு மட்டுமல்ல; மொத்த மனித குலத்திற்கானது. அதிபர் ட்ரம்ப் அனைத்துக்கும் தகுதியானவர். எனக்கு நோபல் பரிசு கிடைத்தபோது அதை அதிபர் ட்ரம்ப்க்கு அர்ப்பணிப்பதாக அப்போதே அறிவித்திருந்தேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அவர் பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்புக்கு இந்தப் பரிசை வழங்கியது குறித்து மச்சாடோ, ’’நமது சுதந்திரத்திற்கான அவரது தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாக எனக்கு அளித்த பரிசை அவருக்கு வழங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒருவர், தானாக முன்வந்து பதக்கத்தை வேறொருவரிடம் வழங்கியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து நோபல் அறக்கட்டளை, ”நோபல் அறக்கட்டளையின் சட்டங்கள் மேல்முறையீடுகளை அனுமதிக்காது. நோபல் குழுக்கள் விருதைப் பெற்ற பிறகு பரிசு பெற்றவர்களின் நடவடிக்கைகள் அல்லது அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன், அதை ரத்து செய்யவோ, பகிரவோ அல்லது மற்றவர்களுக்கு மாற்றவோ முடியாது” எனத் தெரிவித்துள்ளது.

மறுபுறம், மச்சாடோ ட்ரம்புக்கு அளித்திருக்கும் நோபல் பரிசில் அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மச்சாடோ, அடுத்த வெனிசுலா அதிபர் ஆவதற்கான காய் நகர்த்தலை இப்போதே தொடங்கியுள்ளார் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.