கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுருவாக இருந்த போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 26ஆம் அவரது உடல் ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்தன. அதாவது, போப் ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, புதிய போப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும். இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு வரும் 7ஆம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், அதில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டளிக்கும் தகுதியான கார்டினல்கள் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 136 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவின் 4 கார்டினல்களும் இடம்பெறுகின்றனர்.
இந்த நிலையில், புதிய போப் தேர்வு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நகைச்சுவையாகப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ”கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும்” என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், "நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்" என்றார். மேலும், ”போப் பிரான்சிஸுக்குப் பதிலாக யார் இருக்க வேண்டும்” என்று கேட்டபோது, ”நியூயார்க் வெளியே இருக்கும் ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.