ட்ரம்ப் - ஜின்பிங் pt
உலகம்

”சீனாவுக்கான வரி கணிசமாகக் குறைக்கப்படும்” - பின்வாங்குகிறாரா அதிபர் ட்ரம்ப்! திடீர் பல்டி ஏன்?

”சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அதிக வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும்” என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.

எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்த அவர், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பை உயர்த்தினார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தியது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதை 245 சதவீதமாக்கவும் அமெரிக்கா முயற்சித்தது. இந்த நிலையில், ”வரும் காலத்தில் சீனாவின் வரிவிதிப்பு விகிதம் குறைக்கப்படும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப், ஜின்பிங்

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ட்ரம்ப், "145% வரி கொஞ்சம் அதிகம்தான். ஆனால் இந்த அளவுக்கு வரி நீடிக்காது. நிச்சயம் குறைக்கப்படும். ஆனால் அது பூஜ்ஜியமாக மட்டும் இருக்காது. ஒருகாலத்தில் சீனாவுக்கு எந்த வரியும் இல்லாமல் இருந்தது. இதனால் நாம்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டோம். இனி, இதுபோன்ற நிலை இருக்காது. இனி வரும் காலங்களில் நாமும் நன்றாக நடந்துகொள்வோம். அவர்களும் நன்றாக நடந்துகொள்வார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் நம்முடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதேபோல முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், "இந்த அளவுக்கான வரி தொடர்வது சாத்தியமில்லை. தற்போது இருக்கும் வர்த்தக அமைப்பு நீடிக்காது" என்று கூறியுள்ளார். இதையடுத்து விரைவில் சீனாவுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேநேரத்தில், அமெரிக்காவின் இந்த திடீர் பல்டிக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.