எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க அமெரிக்கா, மெக்சிகோ எல்லை நெடுக சுவரைக் கட்டப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். தற்போது அவர் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு சுவரைக் கட்டுவாரா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் கட்டமைப்பதில் மெக்சிகோ நாட்டுக்காரர்களின் பங்கு அளப்பரியது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் குடியேற முழு உரிமை இருப்பதாகவும் கருதுகிறார்கள்.
மெக்சிகோ நாட்டுக்காரர்களால் அமெரிக்காவுக்கு தொல்லைகளும் உண்டு. உலக வங்கியின் கணக்குப்படி, ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் மெக்சிகோ நாட்டுக்காரர்கள் ஓராண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணத்தை மெக்சிகோவுக்கு அனுப்பி வருவதாகத் தெரிய வருகிறது. 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்க காவல்துறை அதிகாரி மெக்சிகோ போதைப்பொருள் கும்பலால் கடத்தி, சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். வேறு வழியின்றி, போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது.
அடுத்த கட்டமாக எல்லைச் சுவர் கட்டப் போவதாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே மூன்றில் ஒரு பகுதி எல்லையில் சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை போதுமானதாக இல்லை. சுவரைத் தாண்டியும், உடைத்துக் கொண்டும், சுரங்கங்கள் மூலமாகவும் ஏராளமானோர் அமெரிக்காவுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.
இதைத் தடுப்பதற்காகவே எல்லை நெடுக சுவரைக் கட்டப் போவதாக அறிவித்தார், டொனால்ட் ட்ரம்ப்.
ஆனால் அரசியல் நிர்பந்தங்கள், பரவலான எதிர்ப்பு, அண்டை நாட்டைப் பகைத்துக் கொள்வதில் உள்ள அச்சம், சுவரைக் கட்டுவதற்கான செலவு போன்ற சவால்கள் அவருக்கு இருக்கின்றன.