ஹமாஸ், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

பாலஸ்தீனர்களைப் பொதுவெளியில் கொல்லும் ஹமாஸ்.. மீண்டும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் சுட்டுக் கொல்லும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.

Prakash J

பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் சுட்டுக் கொல்லும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இப்பரிந்துரையின்படி இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட எஞ்சிய பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் பணியில் ஹமாஸ் ஈடுபட்டு வருகிறது. மேலும் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறி வருகின்றன. இதையடுத்து, காஸாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சித்து வருகிறது.

ஹமாஸ்

அதற்கேற்றபடி சமீபத்தில், 8 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காஸா முனையில் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பொதுவெளியில் சுட்டுக்கொன்றனர். முன்னதாக, 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை ஹமாஸ் கொன்றுள்ளதாக தகவல் வெளியானது.

காஸா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஹமாஸ் மற்ற ஆயுதமேந்திய பாலஸ்தீன குழுக்களுடன் மோதி வருவதால், ஹமாஸின் காட்டுமிராண்டித்தனமான பழிவாங்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். இல்லையெனில், அவர்கள் (இஸ்ரேல்) ஆயுதங்களைக் களைவார்கள், அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் அவர்களை ஆயுதங்களைக் களையச் செய்வோம், அது விரைவாகவும் வன்முறையாகவும் நடக்கும்" என எச்சரித்திருந்த நிலையில், மீண்டும் ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப்

இதுகுறித்து அவர், “காஸாவில் உள்நாட்டு வன்முறைகள் தொடர்ந்தால், உள்ளே புகுந்து அவர்களை கொல்வதைவிட தங்களுக்கு வேறு வழி இல்லை என கூறியுள்ளார். ஹமாஸ் அகற்றப்படும் வரை போர் முடிவடையாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பலமுறை கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் போர்நிறுத்தத் திட்டம் ஹமாஸ் ஆயுதங்களைக் களைந்து, சர்வதேச மேற்பார்வையிடப்பட்ட அமைப்பிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.