trump, greenland x page
உலகம்

”கிரீன்லாந்து நிச்சயம் தேவை” - மீண்டும் புயலைக் கிளப்பிய ட்ரம்ப்.. இலக்கு வைப்பது ஏன்?

”கிரீன்லாந்து அமெரிக்காவுக்குத் தேவை” என்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் கிளப்பியுள்ளார்.

Prakash J

”கிரீன்லாந்து அமெரிக்காவுக்குத் தேவை” என்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் கிளப்பியுள்ளார்.

மீண்டும் கிரீன்லாந்தைக் குறிவைக்கும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்கிற கொள்கையில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குடியேற்றக் கட்டுப்பாடுகள், விசா கட்டணத்தில் மாற்றம் என அவற்றில் அடக்கம். இன்னொரு புறம், நாடுகளைக் கைப்பற்றுவது தொடர்பாகவும் அவ்வப்போது பேசி வருகிறார். அந்த வகையில் கடந்த காலங்களில் கனடா, பனாமா கால்வாய், கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைப்பதுடன் அதற்கான பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், கிரீன்லாந்து பற்றிய விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. லூசியானா ஆளுநர் ஜெஃப் லாண்ட்ரியை கிரீன்லாந்திற்கான தனது சிறப்புத் தூதராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியமனம் செய்தார். அவர் நியமிக்கப்பட்ட ஒருநாளுக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், “கனிமங்களுக்காக அல்ல... அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் தேவை. கிரீன்லாந்தின் எல்லா இடங்களிலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் உள்ளன. ஆகையால் கிரீன்லாந்தை நாம் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

டென்மார்க் இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பரந்த, கனிம வளம் மிக்க கிரீன்லாந்து குறித்த ட்ரம்பின் பேச்சு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சனும் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில், ’தேசிய எல்லைகளும் மாநிலங்களின் இறையாண்மையும் சர்வதேச சட்டத்தில் வேரூன்றியுள்ளன. நீங்கள் மற்றொரு நாட்டை இணைக்க முடியாது. கிரீன்லாந்து, அந்த மக்களுக்குச் சொந்தமானது, அமெரிக்கா கிரீன்லாந்தை கையகப்படுத்தாது’எனத் தெரிவித்துள்ளது.

கிரீன்லாந்து குறிவைக்கப்படுவது ஏன்?

அட்லான்டிக் பெருங்கடலுக்கும் ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள உலகின் மிகப்பெரிய தீவுதான் கிரீன்லாந்து. இந்தத் தீவின் 80 சதவிகிதப் பரப்பு பனிக்கட்டியால் போர்த்தப்பட்டிருக்கிறது. இப்பகுதி அரிய கனிமங்கள் உள்ளிட்ட அபரிமிதமான இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. இது, சுமார் 57,000 மக்கள்தொகை கொண்ட ஒரு முன்னாள் டேனிஷ் காலனியாகும். 2009 ஒப்பந்தத்தின்கீழ் சுதந்திரம் அறிவிக்கும் உரிமையை இந்தத் தீவு கொண்டுள்ளது, ஆனால் மீன்பிடித்தல் மற்றும் டேனிஷ் மானியங்களையே பெரிதும் நம்பியுள்ளது. டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டின்கீழ், 1979 முதல், ஓரளவு தன்னாட்சி பெற்றதாக இருக்கும் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் பிடுஃபிக் விண்வெளி தளம் (Pituffik Space Base) உள்ளது.

greenland

இதன் காரணமாகவே அமெரிக்க ராணுவத்திற்கும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை எச்சரிக்கை அமைப்பிற்கும் கிரீன்லாந்து முக்கியமானதாக இருக்கிறது. மேலும், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் மிக எளிதாக இணைக்கும் பாலமாக இது இருக்கிறது. மேலும், உலக நாடுகள் தங்களின் வர்த்தக வரம்பை ஆர்க்டிக் வட்டத்தில் விரிவுபடுத்த முயல்கின்றன. குறிப்பாக, ரஷ்யா இந்தப் பகுதியை ஒரு மூலோபாய சந்தர்ப்பமாகப் பார்க்கிறது. இதையடுத்தே, ட்ரம்ப் அதன்மீது பார்வையைச் செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் கொள்கை என்பதையே உலகம் முழுவதும் நிலைநாட்ட வைக்கும் வகையிலேயே ட்ரம்ப் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.