இந்தியாவில் இருந்து அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஐடி நிறுவனங்கள் இந்தியர்களை பணிக்கு அமர்த்த பயன்படுத்தும் எச்1பி விசாவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரும் உத்தரவை ட்ரம்ப் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் ட்ரம்பின் அடுத்த உத்தரவு எச்1பி மற்றும் எல்1 விசாக்களை கட்டுப்படுத்தும் வகையில் அமையும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ள அரசாணையின் விவரங்கள் சில இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
இதனிடையே, எச்1பி விசா சீர்த்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எச்1பி விசாவில் பணிக்கு வருபவர்களுக்கான ஊதியத்தை இரண்டு மடங்காக்க வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 60,000 டாலர் ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. இது இரு மடங்காக உயர்த்தும் பட்சத்தில் அதிகப்படியான வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வர இயலாத சூழல் ஏற்படும்.இதனால் எச்1பி விசாக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்த முன்னுரிமை அளிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் இந்திய பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.