உலகம்

வடகொரியாவால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சமாளிப்போம்: ட்ரம்ப்

வடகொரியாவால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சமாளிப்போம்: ட்ரம்ப்

webteam

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் எழுந்துள்ள பதற்றமான சூழல் சமாளிக்கக் கூடியதுதான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் எழுந்துள்ள பதற்றமான சூழல் சமாளிக்கக் கூடியதுதான், அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை ஒருபோதும் மாறிவிடப் போவதில்லை. இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார். மேலும், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக அனைவரும் கேட்டிருப்போம். இந்தச் சூழலை அமெரிக்கா பார்த்துக் கொள்ளும். தளபதி மேட்டீஸ் மற்றும் உயரதிகாரிகளுடன் விரிவாக விவாதித்து வருகிறோம். இந்த சூழலை நிச்சயம் சமாளிக்க முடியும். யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் ட்ரம்ப் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் ஹோக்கைடோ வான்பரப்பு வழியாக வடகொரியா ஏவுகணை செலுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து வடகொரியா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ஜப்பான் வான்பரப்பு வழியாக ஏவுகணை செலுத்தாவிட்டாலும், அதே போன்ற ஒரு சோதனையை வடகொரியா மீண்டும் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து ஜப்பான் கடல் அருகே விழுந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.