அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதேநேரத்தில் தனது அரசமைப்பில் மற்றும் நிர்வாக உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலரை நியமித்து வருகிறார். அந்த வகையில், தற்போது வெள்ளை மாளிகையின் ஊடக துணைச் செயலாளராக இந்திய வம்சாவளி முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாயை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அலுவகம், வெள்ளை மாளிகை துணை தலைமை பணியாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ஆகியோரால் மேற்பார்வையிடப்படுகிறது.
அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயரில் உள்ள ஹனோவரில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். குஷ், சரளமாக ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழி பேசக்கூடியவர். தேசாய்க்கு மதிப்புமிக்க ஜேம்ஸ் ஓ. ஃப்ரீட்மேன் பிரசிடென்ஷியல் ரிசர்ச் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. 2017 ஜூலை முதல் மார்ச் 2018 வரை வாஷிங்டனில் உள்ள ’தி டெய்லி காலர்’ என்ற உள்ளூர் செய்தி இணையதளத்தில் 10 மாதங்கள் நிருபராக பணியாற்றினார். பின்னர், ரிபப்ளிகன் நேஷனல் கமிட்டியில் ஆராய்ச்சி ஆய்வாளராகச் சேர்ந்தார்.
அதற்குப் பிறகு குஷ் தேசாய், குடியரசு கட்சியின் 2024 தேசிய மாநாட்டிற்கான துணை தொடர்பு இயக்குநராகவும், அயோவா மாகாண குடியரசு கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றினார். போட்டிகள் நிறைந்த மாகாணங்கள் மற்றும் பென்சில்வேனியா குடியரசுக் கட்சி தேசிய குழுவின் துணை செய்தித் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப் பணியில், போட்டிகள் நிறைந்த மாகாணங்கள், குறிப்பாக பென்சில்வேனியாவில், செய்திகள் மற்றும் பிரசாரங்களைக் கட்டமைப்பது போன்ற முக்கிய பங்காற்றினார்.