UFO web
உலகம்

ஏலியன்கள் இருக்கிறதா.? ரகசிய கோப்புகளை வெளியிட்ட அமெரிக்கா!

UFO-க்கள் தொடர்பான ஆவணங்களை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கி பொதுவெளியில் வெளியிடும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா நேரடிப் பார்வையாளர் காணொளிகளை வெளியிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்; M.மீரா

அமெரிக்க அரசு மூன்றாவது முறையாக, வெள்ளிக்கிழமையன்று UFO-க்கள் (Unidentified flying object) தொடர்பான புதிய ஆவணங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த ரகசியக் கோப்புகளை வெளியிடும் உத்தரவின் கீழ் இந்த கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் CIA, FBI, NASA, பாதுகாப்புத் துறை மற்றும் பெயரிடப்படாத பிற அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட 53 ஆவணங்கள், 10 படங்கள், ஆறு காணொளிகள் மற்றும் NASA-வின் மூன்று ஒலிப்பதிவுகள் ஆகியவை அடங்கும். இந்தக் காணொளிகள் வானத்தில் கோள வடிவிலான பொருட்களைக் காட்டுகின்றன.

UFO

ஒரு உள்ளூர்வாசி கொடுத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், எஃப்பிஐ அதிகாரிகள் அங்கு நேரில் சென்று இந்த மர்ம நிகழ்வை உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் இரவு நேர வானில் விசித்திரமான முறையில் ஒளிரும் மர்ம கோளங்கள் தொடர்ந்து தோன்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆவணங்களின்படி, இந்த மர்மமான நிகழ்வுகள் நடக்கும் குறிப்பிட்ட இடம் ஒரு ஒதுக்குப்புறமான காட்டில் உள்ள சிறிய குளம் என்று விவரிக்கப்பட்டாலும், அதன் துல்லியமான இருப்பிடம் தற்போதைக்கு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு எஃப்பிஐ முகவர்கள் அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்த போது, அங்கு வானில் தோன்றிய பல விவரிக்க முடியாத விந்தையான வெளிச்சங்களை தங்களின் கண்களால் நேரடியாகக் கண்டுள்ளனர் என்று இந்த கோப்புகளில் கூறப்பட்டுள்ளது.

UFO

மரங்களின் உச்சிக்கு மேலே தோன்றிய ஒரு விசித்திர வெள்ளை ஒளிவட்டம், சுமார் பத்து வினாடிகளுக்கும் குறைவாக இடமும் வலமும் நடனமாடிவிட்டுப் பின்னர் திடீரென காற்றில் மறைந்துவிட்டதாக அந்த அதிகாரிகள் தங்களின் அதிகாரப்பூர்வ புலனாய்வு அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த அறிக்கையில் - ஒரு குளத்தின் மறுமுனையில் ஒரு பிரகாசமான வெள்ளை ஒளிக்குக் கீழே மற்றொரு அடர்ந்த சிவப்பு நிற ஒளிவட்டம் மரங்களின் உயரத்திற்கு மேல் மிதந்து கொண்டிருந்துள்ளது.

அந்த இரண்டு ஒளிவட்டங்களும் திடீரென மிக அதிவேகமாக வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக நகர்ந்து மறைந்து, அடுத்த கணமே அவை முதலில் தோன்றிய இடத்திலேயே மீண்டும் ஒரே நேரத்தில் தோன்றி மறைந்துள்ளன. மரங்களின் வரிசைக்கு இடையே நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் சில ஒளிக்கற்றைகள் விட்டு விட்டுப் பிரகாசிப்பதையும் அவர்கள் கவனித்துள்ளனர்.

UFO

இந்த விசித்திரமான செயல்பாடுகள் அனைத்தும் அருகிலுள்ள எந்தவொரு உள்நாட்டு ராணுவ தளங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலமாகவோ உருவாக்கப்படவில்லை என்பதை அந்த ஆவணங்கள் தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளன.