உலகம்

தாய்லாந்தில் மேலும் 5 பேரை மீட்கும் பணி தொடங்கியது: வைரலாகும் வீடியோ

webteam

தாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள மேலும் 4 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் இன்று பத்திரமாக மீட்கப்படுகிறார்கள்.

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றுள்ளனர். அப்போது பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். 

ஒன்பது நாட்களுக்குப் பின்னர் கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும் மழை காரணமாக 8-ம் தேதியில் இருந்துதான் அவர்களை மீட்க முடிந்தது. முதற்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் நேற்று மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். கடந்த முறை மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களை விட நேற்றைய மீட்புப் பணிக்கு அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது குகைக்குள் மேலும் 4 சிறுவா்களும், அவா்களது கால்பந்து பயிற்சியாளரும் உள்ளனர். அவர்களை மீட்பதற்கு ஒருநாள் தாமதமாகலாம் என கூறப்பட்டது. ஆனால், அதற்காக பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இன்று இரவுக்குள் அனைவரும் மீட்கப்பட்டு விடுவார்கள் என்று தெரிகிறது. 

இதற்கு முன் மீட்கப்பட்டதை போல இன்றைய மீட்பு பணி இருக்காது என்றும் இன்று கடும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று தாய்லாந்து ’டைவர்கள்’ தெரிவித்துள்ளனர். அங்கு கடும் மழை பெய்துவந்தது. கொஞ்சம் குறைந்ததும் மீட்பு பணி தொடங்கியுள்ளது. இதற்கிடையே வீரர்கள் குகைக்குள் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.