உலகம்

டைனோசர் போன்ற பறவை: கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

டைனோசர் போன்ற பறவை: கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Rasus

டைனோசர் போன்ற பறவை இனம் சுமார் 71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாம் வாழும் இந்த உலகில் ஒரு காலத்தில் மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஆட்சி செய்து வந்திருக்கின்றன. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, 16 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக அவை வாழ்ந்துள்ளன. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இவை முழுவதும் அழிந்து போய் விட்டன. விண்கல்லின் தாக்கத்தால்தான் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ராட்சத மிருகமான டைனோசரின் எலும்புகளும், முட்டைகளும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் டைனோசர்கள் போன்றே பெரிய உருவ அமைப்பு கொண்ட பறவை இனம் சுமார் 71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளதை கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கனடாவைச் சேர்ந்த தொல்லுயிரியலாளர், ரெட் டீர் பள்ளத்தாக்கு பகுதியில் பெரிய எலும்புக்கூடு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். இது டைசோனர் போன்ற பெரிய உருவ அமைப்பு கொண்ட ட்ரோடான் பறவை வகை தான் என முதலில் அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அதன் மண்டை ஓட்டு எலும்புகள் ட்ரோடானை விட சிறிய அளவில் வேறுபாடு கொண்டிருக்கிறது. எனவே இது ட்ரோடான் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு பறவை என்பதை கண்டுபிடித்திருக்கிறார். இது உருவ அளவில் டைனோசர் போன்று இருந்திருக்கலாம் எனவும், சுமார் 71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த பறவை இனத்திற்கு "கியூரி அல்பர்டா கன்டர்" என பெயரிடப்பட்டுள்ளது. எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்ட ரெட் டீர் பகுதி முந்தைய காலத்தில் அல்பர்டா என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தின் பெயரையும் புகழ் பெற்ற தொல்லுயிரி இயலாளர் கியூரி பெயரையும் இணைத்து இந்த டைனோசர் போன்ற பறவை இனத்திற்கு "கியூரி அல்பர்டா கன்டர்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இது போன்ற அரியவகை மண்டை ஓட்டு எலும்புகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு இது உதவும் என்றார்.