உலக வைர சந்தையில் வரலாற்றிலேயே இல்லாத விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
உலகின் மதிப்பு மிக்க பொருள்களில் ஒன்றாக வைரங்கள் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் மிக குறைந்த அளவில், சில இடங்களில் மட்டுமே இந்த வைரங்கள் கிடைத்து வந்ததால் அதன் விலை சாமானியர்களுக்கு எட்டாத வகையிலேயே இருந்து வந்தது.
ஆனால் 1950-களில் அமெரிக்காவில் செயற்கை வைரங்கள் உருவாக்கப்பட்டது ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரங்கள் சந்தையில் விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டது.
தொடக்கத்தில் செயற்கை வைரங்களும் இயற்கை வைரங்களுக்கு இணையான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்த பின்னர் செயற்கை வைரத்தை உருவாக்கும் செலவு பெரிய அளவில் குறைந்தது. சப்ளை டிமாண்ட் அடிப்படையிலேயே வைரத்தின் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில், செயற்கை வைரங்களின் சப்ளை அதிகரித்ததால் சர்வதேச சந்தையில் அதன் விலையும் கடுமையாக சரிந்துள்ளது.
கடந்த 2021- 2022-ல் 1-காரட் வைரத்தின் சராசரி விலை சுமார் 6,819 அமெரிக்க டாலர் என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் தற்போது அது 4,500 அமெரிக்க டாலர் என்ற அளவில் குறைந்துள்ளது. அதாவது வைரத்தின் விலை குறுகிய காலத்தில் 27% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக சீனா திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. செயற்கை வைரத்தின் சப்ளையில் சுமார் 60 சதவீத உலக சந்தையைச் சீனா மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. அதோடு 2026ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் சீனாவின் செயற்கை வைரத்தின் ஏற்றுமதி அளவு 65.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் வைரத்தின் விலை மேலும் சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வைரத்தை போல தங்கத்தையும் செயற்கையாக உருவாக்க பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைரத்தை போல தங்கத்தை செயற்கையாக உருவாக்குவதும் சாத்தியமானால் தங்கத்தின் விலையும் பல மடங்கு வீழ்ச்சியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.