Denmarks Princess Isabella reuters
உலகம்

டென்மார்க்கில் முதன்முறை.. அரண்மனை வாழ்க்கை துறப்பு.. ராணுவத்துக்குச் சென்ற இளவரசி!

டேனிஷ் இளவரசி ஒருவர், அரண்மனை வாழ்க்கையைத் துறந்து இராணுவ முகாமுக்குச் சென்றிருப்பது கவனத்தை ஈர்த்திருப்பதுடன், உலக அளவிலும் பேசுபொருளாகியுள்ளது.

Prakash J

டென்மார்க் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசி இசபெல்லா (Princess Isabella). இவர், பத்தாம் ஃபிரடெரிக் மன்னர் மற்றும் மேரி அரசியின் மகள் ஆவார். 19 வயதாகும் இவர், டென்மார்க் அரச குடும்பத்தில் முதல்முறையாக, நாட்டின் புதிய கட்டாய இராணுவச் சேவை முறையின் கீழ் பணியாற்ற உள்ளார். உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற அடுத்த சில வாரங்களிலேயே, டேனிஷ் அரச குடும்பத்தின் கோடை விடுமுறையைத் தொடர்ந்து இசபெல்லா இராணுவப் பணிக்குச் சென்றுள்ளார். பாரம்பரியமாக அரச குடும்ப ஆண் உறுப்பினர்கள் இராணுவப் பயிற்சி பெற்று வந்தபோதிலும், அரச குடும்பப் பெண் உறுப்பினர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததில்லை.

ஆனால், ஐரோப்பா முழுவதும், குறிப்பாக ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டென்மார்க்கில் பரந்த பாதுகாப்பு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, பெண்களுக்குக் கட்டாய இராணுவச் சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, அவர்கள் கட்டாயம் 11 மாதங்கள் ராணுவச் சேவையாற்ற வேண்டும். அதன்படி, இந்த வாரம் நாடு முழுவதும் சுமார் 1,600 இளம்பெண்கள் பணிக்குச் சேர்ந்தனர். இதில், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. ராணுவத்தில் சேருபவர்களுக்கு, வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 9,000 டேனிஷ் குரோனருக்கும் சற்று அதிகமாகவும், அதனுடன் வரி இல்லாத தினப்படியும் வழங்கப்படுகிறது.

ஆனால், இதை இளவரசி தானாகவே முன்வந்து நிராகரித்துவிட்டதாக அரச குடும்பம் உறுதிப்படுத்தியுள்ளது. டேனிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இளவரசி தனது கல்வியின் அடுத்தகட்டத்தை ஒரு வருடம் கழித்து தொடங்க முடிவு செய்திருந்தார். இந்தச் சூழலில்தான் டென்மார்க்கின் கட்டாய இராணுவச் சேவை விதிகளில் ஏற்பட்ட மாற்றங்களால், அப்பணியில் இணைந்து உலகில் கவனம் ஈர்த்துள்ளார். முன்னதாக, அவருடைய மூத்த சகோதரரான பட்டத்து இளவரசர் கிறிஸ்டியன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இராணுவப் பயிற்சியை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.