டென்மார்க் ராய்ட்டர்ஸ்
உலகம்

டென்மார்க் | அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலை.. பெண்களுக்கு கட்டாய ராணுவச் சேவை!

ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில், டென்மார்க் அரசு, பெண்களுக்குக் கட்டாய ராணுவச் சேவையை வழங்க இருக்கிறது.

Prakash J

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் 2 ஆண்டுகள் கட்டாய ராணுவச் சேவையாற்ற வேண்டும் என்னும் நடைமுறை உள்ளது. பெண்களுக்கும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் அரசாங்கம் மசோதா நிறைவேற்றி தீர்மானித்துள்ளது. அதன்படி 18 வயது நிரம்பிய பெண்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டாய ராணுவ சேவையாற்ற அனுமதிக்கப்பட உள்ளனர்.

முதலில் விருப்பம் உடையவர்கள் குலுக்கல் முறையில் கட்டாய ராணுவ சேவைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பின்னர் விருப்பம் தெரிவிக்காதவர்களின் பெயர்களை இணைத்து அவர்கள் அடுத்த சுற்றுக்கு கட்டாய ராணுவச் சேவைக்கு பயன்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோயுற்றவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கு விலக்களிக்கப்பட உள்ளது.

டென்மார்க்

இதனால் நாட்டின் ராணுவம் மேலும் வலிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெண்களுக்கு மிகவும் பொருத்தமான முகாம்கள் மற்றும் உபகரணங்களில் மாற்றங்களைச் செய்யும் பணியில் ஆயுதப் படைகள் ஈடுபட்டுள்ளன.

கடந்த வாரம் நேட்டோ நட்பு நாடுகளுடன் சேர்ந்து பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க ஒப்புக்கொண்ட டென்மார்க், 2026ஆம் ஆண்டில் கட்டாய ராணுவ சேவையின் கால அளவை நான்கு மாதங்களிலிருந்து 11 மாதங்களாகப் படிப்படியாக அதிகரிக்கவும், 2033ஆம் ஆண்டில் ராணுவச் சேவையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை சுமார் 5,000லிருந்து 7,500 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.