செய்தியாளர் - கார்த்திகேயன்
விமான விபத்துகளில் சிக்கினால் ஆபத்து என்பது மிகமிக அதிகம். இதனால்தான் பாதுகாப்புக் காரணங்களை வலுப்படுத்துவதற்காக விமான நிறுவனங்கள், டிக்கெட் கட்டணங்களை அதிகமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி இருக்கும்போது சில சமயங்களில் பெரும் விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிவிடுகிறார்கள். சமீபத்தில்கூட, ஏர் இந்தியாவின் விமானத்தில் ஏற்பட்ட விபத்து, நாடு முழுவதும் பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
இப்படியான சூழ்நிலையில், மற்றொரு விமான விபத்து ஒன்று நடந்து, பயணிகள் பலரையும் நடுக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-900 ER ரக விமானம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சால்ட் லேக் சிட்டிக்கு சென்று கொண்டிருந்தது.
விமானம் தனது சேருமிடத்தை அடைவதற்கு சற்று முன்பு, விமானத்தில் இருந்த காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பு திடீரென பழுதடைந்துவிட்டது. இதனால், பயணிகள் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், காதுகளில் மிகக் கடுமையான வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மரண பயத்தை அடைந்த பயணிகள் அலறித் துடித்துள்ளனர். பின்னர், சுவாசக் கோளாறுகளைச் சரி செய்வதற்காக, விமானத்தில் தானியங்கி முறையில் ஆக்ஸிஜன் முகமூடிகள் வந்துள்ளன. அந்த முகமூடியை அணிந்துகொண்ட பிறகும், விமானப் பணியாளர்களின் அறிவிப்புகளை தங்களது காதுகளால் கேட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இறுதியில், பொதுமக்கள் எளிதில் சுவாசிக்க ஏதுவாக, 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், 27 ஆயிரம் அடி சரிந்து, 10 அடி உயரத்தில் பறக்கத் தொடங்கியது. அவசர நிலை ஏற்பட்டபோது லாஸ் வெகாஸ் நகருக்கு அருகில் பறந்துகொண்டிருந்த விமானம், அங்கிருந்த சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த மென்பொருள் கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, அதே விமானம் பின்னர் சால்ட் லேக் சிட்டிக்கு பாதுகாப்பாக புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பெருங்காயமும் அல்லது உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனமும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.