model image freepik
உலகம்

தெற்காசியா | 70 வயதைக் கடந்த முதியோர்கள்.. வயிற்றுப்போக்கு மரணம் அதிகரிப்பு

தெற்காசியாவில் 70 வயதைக் கடந்த முதியோரிடையே வயிற்றுப்போக்கு மரணங்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

உலக அளவில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 1990இல் 29 லட்சத்தில் இருந்து 2021இல் 12 லட்சமாகக் குறைந்துவிட்டது. ஆனால் தெற்காசிய நாடுகளில் 70 வயதைக் கடந்த முதியவர்களில் ஒரு லட்சத்தில் 476 பேர் வயிற்றுப்போக்கின் காரணமாக உயிரிழக்கின்றனர்.

பணக்கார நாடுகளில் இதே வயதுப் பிரிவில் லட்சத்தில் ஒருவர் கூட வயிற்றுப்போக்கினால் உயிரிழப்பதில்லை. வயிற்றுப்போக்கு மரணங்களைத் தடுப்பதற்கான திட்டங்களும் நடவடிக்கைகளும் உலக அளவில் சீரான முறையில் செயல்படுத்தப்படவில்லை என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

முதியவர்கள் வயிற்றுப்போக்கினால் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான காரணங்களை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். பொதுவாக முதியவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்திருக்கும். இந்தப் பிரச்னைகளின் காரணமாக அவர்கள் குறைவாக நீர் அருந்தும் சூழல்ஏற்பட்டிருக்கும். இதனால் வயிற்றுப்போக்கின்போது உடலின் நீரிழப்பு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும், பல தெற்காசிய நாடுகளில் தூய்மையான குடிநீர், மருத்துவச் சிகிச்சைகள் போன்றவை அனைவருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு நோய் தெற்காசிய நாடுகளில் முதியவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.