ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 99 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹகிபிஸ் என்ற புயல் சனிக்கிழமை டோக்கியோவுக்கு தென்மேற்கு பகுதியில் உள்ள ஈஸு என்ற இடத்தில் கரையை கடந்தது. புயல் காரணமாக ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது. பல இடங்களில் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் 2-வது மாடி வரை வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மாடிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்கும் பணியில் ஜப்பான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. புயலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 99 பேர் காயமடைந்துள்ளனர். பலரை காணவில்லை என சொல்லப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே 70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தனர்.