உலகம்

பங்களாதேஷ் மசூதியில் கேஸ் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

Veeramani

பங்களாதேஷின் நாராயங்கஞ்ச் மாவட்டத்திலுள்ள மசூதியில் ஏற்பட்ட கேஸ் வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, எரிவாயு குழாய் ஒன்றில் இருந்து கேஸ் கசிந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்களாதேஷின் நாராயங்கஞ்ச் நகரில் அமைந்துள்ள பைட்டஸ் சலா ஜேம் மசூதியில் ஏற்பட்ட வாயு வெடிவிபத்தில் 21 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொழுகைக்காக மக்கள் மசூதியில் கூடியிருந்தபோது இந்த வெடிப்பு ஏற்பட்டது.

நாராயங்கஞ்ச் தீயணைப்பு சேவையின் துணை உதவி இயக்குனர் அப்துல்லா அல் அரேபினின் ஆரம்ப தகவல்களின்படி “மசூதியின் தரைக்கடியில் குழாய்கள் மூலமாக எரிவாயு எடுத்துசெல்லப்படுகிறது, அப்போது யாரோ ஒருவர் ஏசி அல்லது மின்விசிறியை இயக்க முயற்சித்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்டோர் தீக்காயங்கள் மற்றும் பிற காயங்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அந்த நிறுவனத்தில் வசிக்கும் மருத்துவர் பார்த்தா ஷாங்கர் பால் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் தீயணைப்புத்துறையும், காவல்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளன.