saudi  reuters
உலகம்

சர்ச்சைப் பதிவு.. போராட்டத்தில் வெற்றி.. சவூதியில் மரணத்தை வென்ற இலங்கைத் தமிழர்!

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அந்த நபர் என்ன கருத்தைப் பதிவிட்டார், அவருக்கு ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது, இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இலங்கையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக, முகமது நபி குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

srilanka

பின்னர் அந்தப் பதிவை அவர் நீக்கியிருந்தாலும், அதன் அடிப்படையில் சவூதி அரேபியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அனோஜனின் பெற்றோர் இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன் மேல்முறையீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஆனால், மேல்முறையீட்டு விசாரணைகளுக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், அனோஜனின் குடும்பத்தினர் அவரை மீட்க இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசும் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்திருந்தது. இதனிடையே, அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, இலங்கைத் தரப்பு சட்டக் குழுவினர் சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைச் சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கைப் பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாக இந்த முடிவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இலங்கைத் தூதரக அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகம் , இலங்கை மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த சட்டக் குழுவினர் ஆகியோருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

saudi

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கு நிம்மதியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இருப்பினும், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மட்டும் அவரது விடுதலை உறுதியாகிவிட்டது என்று பொருளல்ல. அவருக்கு விதிக்கப்பட்ட ஏனைய தண்டனைகள் அவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.