கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் உள்ளது பிரபல இரவு கேளிக்கை விடுதி ஒன்று. இதன் பெயர் ‘ஜெட் செட்’.
இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூரிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.
இங்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரவு 11.30 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிரபல டொமினிகன் பாடகர் ரூபி பெரெஸ் பாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கிளப்பின் மேற்கூரை இடிந்து கீழே விழத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியே வர முயற்சி செய்தபோது மேற்கூரை முழுவதுமாக கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தநிலையில், தற்போதுவரை 184 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 160 ஐ தாண்டியநிலையில், அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பேசிய அவசரக்கால செயல்பாட்டு மையத்தின் இயக்குநர் ஜுவான் மானுவல் மெண்டெஸ், “இந்த சம்பவம் நிகழ்ந்து 12 மணி நேரமாகிவிட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தீயணைப்புப் படை வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அவர்களின் அழுகுரல் கேட்டு மீட்டு வருகின்றனர். அதிகப்படியான மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதால் உடைந்த கான்கிரீட் இடிபாடுகளை இயந்திரம் வைத்துத் தகர்த்தி அடியில் சிக்கியிருப்போரை மீட்க வேண்டியுள்ளது. இந்த விபத்து நடந்த பகுதியை மூன்று தொகுதியாகப் பிரித்து மீட்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த நிகழ்வில் 184 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்." என்று மெண்டெஸ் கூறினார்.