congo country Reuters
உலகம்

பிறப்புறுப்பைத் திருடும் திருடர்கள்? 80-க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொ*.. அதிர்ச்சி தரும் பின்னணி!

சமூக ஊடகங்கள் எந்த அளவுக்கு உண்மையான தகவல்களைப் பரப்புகின்றனவோ, அதே அளவுக்கு பொய்யான தகவல்களையும் பரப்புகின்றன.

PT WEB

“பிறப்புறுப்பைத் திருடும் திருடர்கள்?” இந்த வார்த்தையைக் கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறி, ’திருடர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட மக்களை அடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம். சமூக ஊடகங்கள் எந்த அளவுக்கு உண்மையான தகவல்களைப் பரப்புகின்றனவோ, அதே அளவுக்கு பொய்யான தகவல்களையும் பரப்புகின்றன. இவ்வாறு பரவிய ஒரு பொய்யான வதந்தியால் 80-க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிகவும் வைரலாகப் பரவியது. அதில், சில குழுக்கள் காலம் காலமாக இருப்பதாகவும், அந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு மாந்திரிகம் மற்றும் சூனியம் செய்யத் தெரியும் என்றும் கூறப்பட்டது. அவர்கள் மனிதர்களின் பிறப்புறுப்பைத் திருடிச் செல்வதாகவும், சிலரைத் தொட்டவுடன் அவர்களது உடலில் இருந்து ஆணுறுப்பு காணாமல் போய்விடுவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டுமின்றி, புருண்டி, சாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் வேகமாகப் பரவியது. இதனை நம்பத் தொடங்கிய சிலர், யாராவது தங்களைத் தொடுவதால் தங்களுடைய பிறப்புறுப்பு காணாமல் போய்விடுவதாகவும் குற்றம்சாட்டத் தொடங்கினர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் சிலரை மக்கள் கூட்டமாகப் பிடித்து தாக்கத் தொடங்கினர். அவர்களைக் கல்லால் தாக்குவது, கட்டையால் அடிப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில், சர்வதேச ஊடகமான பிபிசியின் உண்மைச் சரிபார்ப்புக் குழு இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

congo

அவர்களது ஆய்வறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோன்ற ஒரு வதந்தி கடந்த 2008-ஆம் ஆண்டிலும் பரவியதாகவும், தற்போது கடந்த ஆண்டு இந்த விவகாரம் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் பலரை மக்கள் பிடித்து கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தேகத்தின் பேரிலான கொடூரத் தாக்குதல்களில், கடந்த ஆண்டு மட்டும் 6 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஒருவரைத் தொடுவதாலேயே அவரது பிறப்புறுப்பு காணாமல் போவதற்கான மருத்துவ அல்லது அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களையே சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, பிறப்புறுப்பு காணாமல் போய்விட்டதாக நினைத்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதன் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர