Kissing Bug x page
உலகம்

அமெரிக்காவின் 32 மாநிலங்களில் பரவும் முத்தப்பூச்சிகள்.. அதன் பாதிப்புகள் என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முத்தப்பூச்சிகளின் தாக்கம் காரணமாக, ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Prakash J

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முத்தப்பூச்சிகளின் தாக்கம் காரணமாக, ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  முத்தப்பூச்சிகள் என்றால் என்ன?

’அமெரிக்க டிரிபனோசோமியாசிஸ்’ என்று அழைக்கப்படும் சாகஸ் நோய், ’டிரிபனோசோமா க்ரூஸி’ என்ற ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இது ’ட்ரையடோமைன் பூச்சிகள்’ அல்லது ’முத்தமிடும் பூச்சிகள்' என அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மனிதர்களின் வாய் மற்றும் கண்களுக்கு அருகில் கடிப்பதால், அவை ’முத்தப்பூச்சிகள்’ எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இரத்தத்தை உணவாக உட்கொள்ளும் இந்தப் பூச்சிகள் கடிக்கும்போது, 'டிரிபனோசோமா க்ரூஸி' எனும் ஒருவகை ஒட்டுண்ணியை பரப்புகின்றன. இந்த ஒட்டுண்ணி சாகஸ் நோயை ஏற்படுத்துகிறது. முத்தமிடும் பூச்சி, பெரும்பாலும் முகத்தைச் சுற்றி கடித்து, பின்னர் பாதிக்கப்பட்ட மலத்தைக் காயத்தின் அருகே கொட்டுகிறது. அதைச் சொறிந்தாலோ அல்லது தொட்டாலோ, ஆபத்தான ஒட்டுண்ணி டிரிபனோசோமா க்ரூஸி உடலில் நுழைகிறது.

Kissing Bug

முத்தப்பூச்சிகளால் உயிருக்கே ஆபத்து

இது, இதய மற்றும் செரிமான அமைப்புகளை பாதிக்கும் ஒரு தீவிர நோயாகும். ஆரம்பத்தில் அறிகுறிகளைக் காட்டாத இந்த நோய், அதேசமயம் நீண்டகாலத்தில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும் இந்த நோய், முதல் கட்டத்தில் தலைவலி, காய்ச்சல், கண் இமை வீக்கம் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் இதன் அடுத்தகட்டமாக பல நாட்களுக்குப் பிறகு இதய நோய்க்கும் செரிமானக் கோளாறுகளுக்கும் ஆளாக்குகிறது. இதனால் பாதிக்கப்படும் நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு வரை உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், 10 பேரில் ஒருவர் கடுமையான செரிமானக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகவும் ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. ”இது ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகும்” எனக் குறிப்பிடும் நிபுணர்கள், ”இது ஆபத்தானது" என எச்சரிக்கின்றனர். இது அசுத்தமான இரத்தம், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை அல்லது தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் மூலமாகவும் பரவக்கூடும் என்கின்றனர்.

அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும்  முத்தப்பூச்சிகள்

மறுபுறம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தப் பூச்சிகள் பரவலாகக் காணப்படுவதாகவும், அதைத் தவிர 32 மாநிலங்களில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. கலிபோர்னியா, டெக்சாஸ், அரிசோனா, லூசியானா, டென்னசி, மிசௌரி, மிசிசிப்பி மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய குறைந்தது எட்டு மாநிலங்களில் மனித தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏராளமான வனவிலங்குகள் மற்றும் பொருத்தமான சுற்றுச்சூழல் நிலைமைகள் காரணமாக, இந்த மாநிலங்களில் முத்தமிடும் பூச்சிகளின் செயல்பாடு அதிகமாக உள்ளது. அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, அமெரிக்காவில் சுமார் 3,00,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், பலர் தங்களுக்கு இந்த நோய் இருப்பது தெரியாது என்றும் நியூயார்க் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

Kissing Bug

இதன் காரணமாக இந்த நோயை, அமெரிக்காவின் உள்ளூர் நோயாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. அதேநேரத்தில், உலகம் முழுவதும், இந்த நோயால், ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் 10,000 க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர் என்று ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

முத்தப்பூச்சிகள் எப்படி இருக்கும்?

சாகஸ் நோயை பென்ஸ்னிடசோல் மற்றும் நிஃபர்டிமாக்ஸ் போன்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி கடுமையான கட்டத்தில் திறம்பட சிகிச்சையளிக்க முடியும். அதேநேரத்தில் நாள்பட்ட கட்டத்தில் குணப்படுத்த முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். வீடுகளில் விரிசல்களை மூடுதல், ஜன்னல்களில் திரைகளை நிறுவுதல், பூச்சிக்கொல்லிகள் சிகிச்சையளிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் மூலம் இவற்றைத் தடுக்க முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Kissing Bug

முத்தமிடும் பூச்சிகள் தட்டையான வடிவில் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலும் சிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற கோடுகள் அல்லது அவற்றின் விளிம்புகளைச் சுற்றி திடமான இலகுவான நிழல்களைக் கொண்டிருக்கும். அவை கூர்மையான, கூம்பு வடிவ தலை மற்றும் நீண்ட, மெல்லிய கால்களைக் கொண்டிருக்கும்.