அமெரிக்காவில் தேசிய தின வார இறுதி கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அங்கு பல்வேறு மாகாணங்களில் வெப்பம் சுட்டெரிக்கிறது. நியூயார்க், பிலடெல்பியா உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளதால், சுமார் இரண்டரை கோடி மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். வர்ஜீனியா, கரோலினாஸ் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வெப்பம் அதிகரித்து, கனடாவின் மேற்குப் பகுதிகளுக்கும் பரவும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அமெரிக்காவில் வெப்பம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலையால் இதுவரை 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பாவின் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் ஜூன் 20 மற்றும் 28ஆம் தேதிக்கு இடையே மோசமான வெப்ப அலை வீசியது. இதனால் ஜூன் மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரான்சில் ஒரே வாரத்தில் பலி எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் 35 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தால் தவித்து வருகின்றனர்.