உலகம்

’தாவூத் கராச்சியில்தான் இருக்கிறார்’: பாகிஸ்தானின் பொய் அம்பலம்

webteam

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று அவரது நெருங்கிய கூட்டாளி தெரிவித்துள்ளார். 

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தாவூத் இப்ராஹிமும் அவர் நண்பர்களும்தான் காரணம் என்று இந்தியா கூறி வருகிறது. தாவூத் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதை மறுத்து வருகிறது. இருந்தாலும் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா, தாவூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித் தது. அவர் சொத்துகளை ஐ.நா மூலம் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளி என்று கருதப்படும், ஜபிர் மோடிவாலா (Jabir Motiwala), அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று லண்டனின் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது அமெரிக்காவில் ஆள் கடத்தல், பணமோசடி, போதைபொருள் கடத்தல் உட்பட பல வழக்குகள் உள்ளன.
 
அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாவும் அவரது தளபதி போல ஜபிர் மோடிவாலா செயல்ப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தாவூத் இப்ராஹிமின் டி கம்பெனியின் சர்வதேச நெட்வொர்க்கை ஜபிர்தான் கவனித்து வருவதாக இந்தியா வும் கூறி வந்தது.

(ஜபிர் மோடிவாலா)

இந்நிலையில், கராச்சியில் தாவூத் வீட்டின் அருகிலேயே ஜபீர் வசித்து வந்ததாகவும் அவருடனும் அவர்கள் குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் ஜபீர் தெரிவித்ததாக அமெரிக்க புலனாய்வுத்துறை கூறியுள்ளது. இதன் மூலம், தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் சொல்லி வந்தது பொய் என்பது திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது.

அதோடு தாவூத் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் தாவூத் மீசை இல்லாமல் இருக்கிறார்.