உலகம்

புடினுக்கு நெருக்கமானவரின் மகள் கார் குண்டுவெடிப்பில் பலி - யாருக்கு வைத்த குறி?

JustinDurai

ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவரை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டில் அவரது மகள் சிக்கி விட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாதிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர் அலெக்சாண்டர் டுகின் (60). புடினின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மூளையாக செயல்படும் இவர், ரஷிய சித்தாந்தவாதியும் ஆவார். ரஷ்ய மொழி பேசும் பிரதேசங்களை, ரஷ்யாவுடன் ஒன்றிணைக்க நீண்ட காலமாக போராடி வந்தவர் ஆவார்.

மேலும் இவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். ஐரோப்பாவையே ரஷ்யா தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் காலம் வெகுதொலைவில் இல்லை எனக் கூறி வந்தார் அலெக்சாண்டர் டுகின். இதனால் பல நாடுகள் இவர் மீது பொருளாதார தடை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா (29) கார் குண்டுவெடிப்பில் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாரியா, மாஸ்கோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலை ஒன்றில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் விபத்தில் சிக்கினார். இதில், டாரியா டுகினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டாரியா டுகினா கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காரணம் என்னவென்று முழுமையாக தெரிவில்லை என்றாலும், அவரின் தந்தைக்கு வைக்கப்பட்ட இலக்கில் இவர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அலெக்சாண்டர் டுகின் பயணம் செய்ய வேண்டிய காரில் கடைசி நேரத்தில் அவரது மகளான டாரியா டுகினா பயணம் செய்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டம் வகுத்தவர்களில் முக்கியமானவர் இந்த அலெக்சாண்டர் டுகின். அதனாலேயே அவர் மீது குறிவைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. டாரியாவின் மரணம் தொடர்பாக புடின் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஆப்கானில் அமெரிக்க பத்திரிகையாளர் கைது-அல்கொய்தா தலைவர் கொலைக்கு பழிக்குப்பழி நடவடிக்கையா?