டேனியலா தாக்ரே
டேனியலா தாக்ரே  ட்விட்டர்
உலகம்

“வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நேசியுங்கள்” - புற்றுநோயாளி எழுதிய உருக்கமான கடைசி கடிதம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

இங்கிலாந்தை சேர்ந்தவர் டேனியலா தாக்ரே. இவருக்கு வயது 25. இவர் வெகுநாட்களாக அரியவகை புற்றுநோயான பித்தப்பை புற்றுநோயினால் போராடிக் கொண்டிருந்துள்ளார்.

அந்தப் போராட்டம் முடிவினை எட்டவே டேனியலா சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர், இக்கடிதத்தை தான் இறந்த பிறகு பகிருமாறு உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன்பேரில் இதனை அவரது லிங்க்டின் பக்கத்தில் வெளியிட்டார் அவரின் காதலர்.

வைரலாகும் டேனியலாவின் கடைசி கடிதம்

அக்கடிதத்தில், “நீங்கள் இப்பொழுது இக்கடிதத்தினை படித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் , நான் உயிருடன் இல்லை இறந்துவிட்டேன் என்று அர்த்தம். என் சார்பாக எனது குடும்பத்தினர் உங்களுக்கு இக்கடிதத்தினை பகிர்ந்து கொண்டுள்ளனர். முதலில் நான் கூறி கொள்ளவிரும்புவது, எல்லா புற்றுநோய்களும் வாழ்க்கை முறையினால் ஏற்படாது.

சில சமயங்களில் அவை மரபியல் காரணங்களாலும், துரதிர்ஷ்டவசத்தினாலும் ஏற்படுகிறது. எனது வாழ்க்கையை பொறுத்தவரை நான் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தபோதிலும் என் பித்தநாளத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. அதன் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிப்போனது.

இதனை நாம் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் எப்படி கையாள்கிறோம் என்பது முக்கியம். நாம் எப்படி கையோள்வோம் என்பதை நாமே தீர்மானிக்க முடியும். அதனால் என் வாழ்க்கையானது நிலைக்குலைந்து போனபோதும், நான் மனம் தளரவில்லை.

இதையே நான் உங்களுக்கும் சொல்கிறேன். வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் அனுபவிக்க ஆரம்பியுங்கள். ஒவ்வொரு நொடியையும் நேசிக்க ஆரம்பியுங்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சியை தருகிறதோ அதனை செய்யுங்கள். உங்களின் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து யாரையும் பறிக்க விடாதீர்கள். அற்புதமான கற்பனை உலகில் மிதந்து செல்லுங்கள்.

இறுதியாக என் அன்பு டாம். நான் உன்னை முடிவின்றி காதலிக்கிறேன், என்றும் காதலிப்பேன். எனது வாழ்வின் மகிழ்ச்சிக்கும், அன்பிற்கும் காரணமாக இருந்த உனக்கு மனமார்ந்த நன்றி. இனி உன் வாழ்க்கையை நீ அனுபவி!அதற்கான தகுதியை உடையவன் நீ” என்று எழுதியுள்ளார்.

இப்படி அழகான குடும்பம், காதலர், நண்பர்கள் என அவரின் வாழ்க்கையை அழகாக்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்து விட்டு, ‘நாம் பிரிந்திருந்தாலும் ... நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்’ என்று அதனை முடித்துள்ளார். இந்தக் கடிதமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.