libya
libya pt web
உலகம்

2000 பேர் பலி; 10 ஆயிரம் பேரை காணவில்லை.. புரட்டிப் போட்ட டேனியல் புயலால் உருக்குலைந்த லிபியா!

Angeshwar G

லிபியாவில் கனமழை பெய்து வரும் சூழலில் டேனியல் புயல் லிபியாவை தாக்கியது. இதனால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் டெர்னாவில் உள்ள பாலங்களும் அணைகளும் இடிந்தது. இதனால் அந்நகரமே நீரில் மூழ்கியது.

இந்த புயலின் காரணமாக 2000 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த புயல் காரணமாக 10 ஆயிரம் பேர் வரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வரும் அதே சூழலில் மீட்புக் குழுவினர் காணமல் போனவர்களையும் தேடி வருகின்றனர். டெர்னாவில் 25% அழிந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

டெர்னா மட்டுமல்லாமல் அந்நாட்டின் பிற பகுதிகளான பெடா, சுசா உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் கடந்த 12 வருடங்களாக அரசின் அனைத்து செயல்பாடுகளும் போரை முன்வைத்தே இருந்துள்ளது. இதனால் மீட்புப் பணிகளுக்கு தேவையான குழுக்கள் குறைவாக உள்ளதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் லிபியா சர்வதேச உதவியை நாடியுள்ளது.

அந்நாட்டின் அதிகாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட்டு வருகின்றனர். மின்சாரம் மீண்டும் வழங்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லிபியா மட்டுமின்றி துருக்கி, பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.