அமெரிக்க நாட்டிற்கு மிக அருகில் இருக்கும் ஒரு அழகிய குட்டித் தீவு நாடு கியூபா. இந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் அங்கு மேலும் விலைவாசி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அங்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு துறை அமைச்சர் மார்டா எலெனா ஃபீட்டோ கப்ரேரா, வறுமை குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள்போல நடிக்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளைப் பாருங்கள். அவர்கள் பிச்சைக்காரர்களைப்போல நடிக்கிறார்கள். உண்மையில், அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. கியூபாவில் பிச்சைக்கார்கள் இல்லை. கார் கண்ணாடிகளை சுத்தம் செய்பவர்கள்கூட எளிதான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மது அருந்தப் பயன்படுத்துகிறார்கள். வரி செலுத்தாமல் இருக்க மறுவிற்பனை செய்ய பொருட்களை மீட்டு வருகின்றனர்” எனக் கடுமையாக விமர்சித்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவர் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து மார்டா எலெனா ஃபீட்டோ கப்ரேரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.