வளைகுடாவில் தொடங்கிய போர், கடந்த ஜூன் 17-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மூடப்பட்ட ஹார்முஸும் திறக்கப்பட்ட நிலையில், எண்ணெய் போக்குவரத்து மெல்ல சீராகி வந்தது. இவ்வாறு, மத்தியக் கிழக்கில் போர் மேகங்கள் சற்று தணிந்திருந்த நிலையில், ஹார்முஸ் வழியாக சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, ஜூலை 7-ம் தேதி அமெரிக்க ராணுவம் ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியது.
தொடர்ந்து, ஜூலை 8-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாகவும் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனையடுத்து, மீண்டும் இருநாடுகளுக்கு இடையேயான மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நேற்று இரவு ஹார்முஸ் பகுதியில், ஈரான் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. தொடர்ந்து, ”ஹார்முஸ் நீரிணையில் சுதந்திரமாக பயணிக்கும் வர்த்தக கப்பல்களைத் தாக்கும் ஈரானின் திறனைக் குறைப்பதே எங்களின் நோக்கம்” என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
இவ்வாறு, ஈரான் அமெரிக்கப் போர் மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்காலிக அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு குறைந்த கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஆரம்பகட்ட வர்த்தகத்தில் 3.3 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் $78.50 ஆக விற்பனையாகிறது. சமீபத்தில் இது $70.14 என்ற குறைந்த அளவைத் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க கச்சா எண்ணெய் 3.4 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் $73.83 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதல் போக்கு, உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.