உலகம்

6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ந்த கச்சா எண்ணெய்! ஆனால் மாற்றம் காணாத பெட்ரோல் விலை!

ச. முத்துகிருஷ்ணன்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. திங்கள்கிழமையுடன் முடிந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 90.23 அமெரிக்க டாலராக இருந்தது.

லண்டனில் வர்த்தகம் செய்யப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.3 சதவீதம் குறைந்து 96.48 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் மீதான சர்வதேச வர்த்தக தடைகள் அகற்றப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஈரான் கச்சா எண்ணெய் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது.

மேலும் சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏன் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை?

பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் இருந்த காலகட்டத்திலும், அடுத்ததாக சமீபத்தில் வரிக்குறைப்பு செய்யப்பட்ட காலகட்டத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 14 முதல் 18 ரூபாய் வரையும், ஒரு லிட்டர் டீசலுக்கு 20 முதல் 25 ரூபாய் வரையும் இழப்பை சந்தித்தன. கச்சா எண்ணெய் விலை தற்போது சரிந்திருப்பதால் இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் அந்நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நாட்டில் அதுவரை எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.